×

கருணை, நல்லிணக்கம், அன்பின் வடிவமான எங்கள் ராமர் காந்தியின் ராமர் ஆனால் உங்கள் ராமர் நாதுராம்: மார்க்சிஸ்ட் எம்பி பேச்சு வைரல்

புதுடெல்லி: ‘ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். எங்கள் ராமர் கருணை, நல்லிணக்கம், அன்பே வடிவான மகாத்மா காந்தி கூறிய ராமர். ஆனால் உங்கள் ராமரோ நாதுராம்’ என மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மாநிலங்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்பி ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது: இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அனைத்து பாஜ எம்பிக்களும், அவர்களது பேச்சில் ராமர் கோயில் பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் குறிப்பிடாமல் உரையை முடிக்கவில்லை. இப்போதெல்லாம் அரசியல் நிகழ்ச்சிகள் மத நிகழ்ச்சியாக மாற்றப்படுகிறது. மத நிகழ்ச்சிகள் அரசியல் நிகழ்ச்சியாக மாற்றப்படுகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவை நாங்கள் புறக்கணித்தது அரசியல் என்றால், சங்கராச்சாரியார்கள் புறக்கணித்தது ஏன்?
அயோத்தி ராமர் கோயில் விஷயத்தில் இருந்து பாஜவினர் திடீரென சட்டத்தை மதிப்பவர்களாகி விட்டனர். அயோத்தி கோயில் பிராணபிரதிஷ்டையின் போது கூட உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டினர். உங்களுக்கெல்லாம் என்ன செலக்டிவ் அம்னீசியாவா?

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த அதே உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு அபத்தமான அத்துமீறல், திட்டமிட்ட சதி என கூறி உள்ளது. சட்டத்தின் கடுமையான மீறல் என குறிப்பிட்டுள்ளது. அதை மறந்து விடுகிறார்கள்.
ராமர் என்ன உங்களுக்கு மட்டுமா சொந்தம், எங்களுக்கும்தான் சொந்தம். ஆனால் எங்கள் ராமர், கருணை, நல்லிணக்கம், அன்பே வடிவான மகாத்மா காந்தி கூறிய ராமர். ஆனால் உங்கள் ராமரோ நாதுராம். இதுதான் எங்கள் ராமருக்கும் உங்கள் ராமருக்கும் உள்ள வித்தியாசம். உங்களால் கடவுளை ஏமாற்ற முடியாது. ராமரை ஏமாற்ற முடியாது. இந்த நவீன ஜனநாயக நாட்டில் செங்கோலுக்கு பின்னால் நடந்து வந்தது வேதனை அளித்தது.

முதலில் பிரதமர் மோடி அவர்கள் மக்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும். கடவுள்களுக்கு அல்ல. அவர் பிராண பிரதிஷ்டை செய்ய வேண்டியது மணிப்பூரில்தான். அங்கு சென்று மணிப்பூர் மக்களுக்கு பிராண பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக, வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் நாடகத்தை உருவாக்காதீர்கள். எங்கு பார்த்தாலும் தோண்டுகிறீர்கள். இன்னும் ஆழமாகத் தோண்டி, தோண்டி எங்கு செல்லப் போகிறீர்கள்? அடுத்தது புத்த, ஜெயின் விகாரங்கள் கிடைக்கும். அதையும் தாண்டி தோண்டினால், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லலாம். அதற்கும் மேல் தோண்டினால் நம் முன்னோர்கள் வந்த ஆப்பிரிக்காவுக்குச் செல்லலாம். எனவே நீங்கள் தோண்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இவ்வாறு அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

The post கருணை, நல்லிணக்கம், அன்பின் வடிவமான எங்கள் ராமர் காந்தியின் ராமர் ஆனால் உங்கள் ராமர் நாதுராம்: மார்க்சிஸ்ட் எம்பி பேச்சு வைரல் appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Nathuram ,New Delhi ,Lord ,Mahatma Gandhi ,John Brittas ,Rajya Sabha ,Rajya ,Sabha ,
× RELATED ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே...